பல இடங்களில் குலதெய்வம் கண்டுபிடிக்க நிறைய பேர் முயற்சி செய்து வருகின்றனர். ஒரு சிலர் தங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிக்கின்றனர்.
உண்மையில் இதுவரை தெரியாத குலதெய்வத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களுக்கு அதற்கான யோகம் இருக்க வேண்டும்.
முதலில் ஒருவருக்கு தலை முறை சாபம் முடிவுக்கு வரும்போது மட்டுமே குலதெய்வம் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் வருகிறது.
ஒருவர் தன் முப்பது வயதில் பல தலைமுறைகள் வழிபாடு விட்டு போன தங்கள் குலதெய்வத்தை தேடி கண்டுபிடிக்கிறார் என்றால் அவர் தந்தையோ பாட்டனாரோ ஏன் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதற்கான யோகம் அல்லது கொடுப்பினை இல்லை என்று பொருள்.
விதித்ததே கிடைக்கும் என்பதே கர்ம வினை. விதிவழியே செயல் வடிவு என்பது தத்துவம். அதன்படி ஒருவருக்கு யோகமும் அமைப்பும் கொடுப்பினையும் இருந்தால் மட்டுமே அவருக்கு குலதெய்வத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் தேவையும் ஏற்படும்.
அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டுவிட்டால் அதற்கான முயற்சியை மேற்கொள்வது கட்டாயம். எண்ணம் ஏற்படாமல் இருப்பது கர்மவினை மற்றும் விதிவசம். முயற்சி செய்யாமல் இருப்பது அவரவர் அலட்சியம் அல்லது தவறு.
குலதெய்வம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமண தடை, பொருளாதாரபிரச்சனை, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறை ஆகிய அவசியங்களால் ஏற்படுகிறது என்றால் குலதெய்வத்தின் அனுக்கிரகம் முற்றாக நீங்கும் தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
பல இடங்களில் குல தெய்வத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் ஆனால் அதை செயலாக்காமல் பொருளாதார காரணங்களை காட்டியோ, அலைச்சல் சிரமங்களை காட்டியோ, அலட்சியம் அல்லது சோம்பேறிதனத்தாலோ அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பார்கள். அப்படி இருப்பவர்களுக்கு தெய்வ பலம் குறைவாகவும் தெய்வானுக்கிரகம் குறைவாகவும் இருக்கும் இது பெரும்பாலும் அவர்களின் சந்ததியினரை கடுமையாக பாதிப்பதுடன் இவர்களுக்கு பெரும்பாலும் இறுதிகாலம் மிக சிரமமாக இருக்கும்.
பெரும்பாலும் குலதெய்வம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் ஏற்பட்டப்பின் அதற்கான முயற்சியில் தொய்வு ஏற்படுவது ஜென்ம ஜாதகத்தின் தாக்கத்தால் ஏற்படுவது.
உதாரணமாக லக்னாதிபதிக்கு பகை அல்லது நீசகிரகத்தின் தாக்கம் தாசாபுத்தியில் இருப்பவர்கள் மற்றும் லக்னாதிபதி நான்காம் இடத்தில் இருப்பவர்கள் குலதெய்வம் கண்டுபிடிக்க பணம் செலவு செய்ய தயங்குவார்கள் ஆனால் அதே அளவு பணத்தை திரைபடம் பார்க்கவோ உணவு விடுதிகளில் செலவு செய்யவோ தயங்கமாட்டார்கள். லக்னாதிபதி பணிரெண்டில் இருந்தால் மற்றவர்களின் போதனையால் முயற்சியை கைவிடுவார் அல்லது கால தாமதம் செய்வார்.
ஜென்ம ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் கன்னியாக அமைந்தாலோ அல்லது ஐந்திற்குரியவன் பாவகிரங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்ரிருந்தாலோ எந்த சிரமமும் படாமல் தன் காரியம் நிறைவேற வேண்டும் என்று நினைப்பார்.
இவ்வாறான தடை ஏற்படுவது என்பது அவரவர் கர்ம பலன். இவர்களின் சந்ததியினருக்கு இளமை காலம் முதல் குலதெய்வ அனுக்கிரகம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கும் ஆனால் பெற்றவர்களின் ஜென்ம ஜாதக கிரக நிலைகளால் அது தடை படும்.
பல இடங்களில் எங்கள் முன்னோர்கள் சொல்லி கொடுக்கவில்லை எங்கள் தந்தை வழிகாட்டவில்லை என்று மூதாதையர்களை நிந்திப்பதை கேட்டிருக்கிறோம்.
தடைகள் எது ஏற்பட்டாலும் அவற்றை தாண்டி குலதெய்வத்தை அறிந்து அவரவர் சந்ததியினருக்கு சொல்லி கொடுப்பது கடமை.
Comments
Post a Comment